இந்திய அணியில் என்னுடைய இலக்கு இதுதான் - புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்

இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-09-14 08:55 GMT

image courtesy: twitter/@BCCI

சென்னை,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடர் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் பரிந்துரைப்படி மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவர் இலங்கை தொடரில் இந்திய அணியுடன் இணையவில்லை.

இந்திய அணி தற்போது வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது சென்னையில் இந்திய அணியுடன் முதல் முறையாக இணைந்துள்ள மோர்னே மோர்கல் தம்முடைய வேலைகளையும் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருப்பது அதிர்ஷ்டம் என்று மோர்கல் கூறியுள்ளார். எனவே அவர்களின் பலம் பலவீனங்களை புரிந்து கொண்டு தேவையான உதவிகளை செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நிகராக இந்திய அணியை வழிநடத்துவதே தம்முடைய இலக்கு என்றும் மோர்கல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற சீனியர் வீரர்களை கொண்டிருப்பதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர்கள் நமது அணியை முன்னின்று வழி நடத்துவார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பது என்னுடைய பொறுப்பாகும். இந்த நீல ஜெர்சி நிறைய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இந்திய வீரர்களை இந்த சூழ்நிலையில் செட்டிலாக வைத்து எனது அனுபவத்தை அவர்களுக்கு கொடுப்பதே என்னுடைய வேலையாகும். என்னைப் பொறுத்த வரை வீரர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

சில இந்திய வீரர்களுக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். சிலர் ஐபிஎல் தொடரில் விளையாடி பார்த்துள்ளேன். எனவே அவர்களுடைய பலம் பலவீனங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல் அடுத்த தொடர்களுக்கு தேவையான இலக்கை செட்டிங் செய்வது முக்கியம். இந்திய வீரர்கள் எப்படி தங்கள் விஷயங்களை செய்தார்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு தொழில்முறையாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். இது வெற்றி நடைக்கான நல்ல அறிகுறி. அதை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம் என்று நம்புகிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்