இந்தியா தரமான அணிக்கு எதிராக இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை- சுனில் கவாஸ்கர்
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.;
அகமதாபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.
இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா தரமான அணிக்கு எதிராக இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை என்று சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு;- "நான் சோகமாக இருக்கலாம். ஆனால் இந்த வலுவான இந்திய அணிக்காக நான் பெருமைப்படுகிறேன். சில நேரங்களில் சில அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக செல்லாது. ஆனால் இந்திய அணியினர் இந்த தொடரில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள். எனவே இந்த அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் இன்று சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை" என்று கூறினார்.