விராட் கோலியை புகழ்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர்!
கடந்த சில வருடங்களாகவே விராட் கோலியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் படைத்து வரும் பல சாதனைகளால் விளையாட்டில் மட்டுமல்லாது உலகெங்கிலும் மிக பிரபலமானவர்.
அதே போல களத்திற்கு வெளியே இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு வீரர் என்ற மகத்தான பெருமைக்கும் விராட் கோலி சொந்தக்காரராக இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே விராட் கோலியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென பல வருடங்களாக நான் உணர்கிறேன். இந்தியாவுக்கு நான் ஒரே ஒரு முறை மட்டுமே சென்றுள்ளேன். கடந்த 10 - 11 வருடங்களுக்கு முன்பாக புதுடெல்லியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் விளையாடுவதற்காக சென்றேன். விரைவில் மகத்தான வரலாறும் கலாச்சாரமும் மத நம்பிக்கையும் கொண்ட அந்த நாட்டுக்கு செல்வேன் என்று நம்புகிறேன்.
இந்தியாவில் உள்ள சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி போன்ற விளையாட்டு வீரர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். குறிப்பாக கடந்த சில வருடங்களாக விராட் கோலியுடன் நான் இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்தி மூலம் தொடர்பில் இருக்கிறேன். ஆனால் இன்னும் நேரில் பார்க்கவில்லை. அவருடைய கெரியர் மற்றும் சாதனைகளை நான் எப்போதும் ரசிக்கிறேன்" என்றார்.