இந்திய அணியின் உண்மையான கதாநாயகன் ரோகித் சர்மா- நாசர் உசேன் பாராட்டு!

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.;

Update: 2023-11-17 03:27 GMT

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் விராட்கோலி ஒருநாள் போட்டியில் 50-வது சதம் அடித்து சாதனை படைத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் (105 ரன்) நாக்-அவுட் சுற்றில் அதிவேக சதம் கண்டார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். மூவரும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

நடப்பு தொடரில், தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி நல்ல அடித்தளம் அமைப்பது அடுத்து வரும் வீரர்கள் எளிதாக ஆட வழிவகுப்பதுடன் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.

அரையிறுதி வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் அளித்த பேட்டியில், 'தலைப்பு செய்தியில் விராட்கோலிதான் இடம் பிடிப்பார். ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமியும் இடம் பெறுவார்கள். ஆனால் இந்திய அணியின் கலாசாரத்தை மாற்றிய ரோகித் சர்மாதான் உண்மையான கதாநாயகன். இன்றைய ஆட்டத்தில் கதாநாயகனாக ரோகித் சர்மாவையே நான் கருதுகிறேன்.

லீக் சுற்று ஆட்டம் வேறு. நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்பது வேறாகும். அச்சமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறையை நாக்-அவுட் போட்டியிலும் தொடரப்போகிறோம் என்பதை அவர் மற்ற அணியினருக்கு தெளிவாக தெரியப்படுத்தி இருக்கிறார்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்