எனக்கு கிடைக்க வேண்டிய ஆட்ட நாயகன் விருது 2 கேட்ச்களை தவறவிட்ட தோனிக்கு வழங்கப்பட்டது - முன்னாள் பாக். வீரர் விமர்சனம்

கடைசியாக கடந்த 2012-2013 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதின.;

Update: 2023-07-02 12:19 GMT

கராச்சி,

சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதே இந்தியா – பாகிஸ்தான் மோதலை உலக அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.

அந்த நிலைமையில் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்துள்ள இவ்விரு நாடுகளும் ஆசிய மற்றும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன.

அந்த வரிசையில் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவது உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதின.

இந்திய மண்ணில் நடைபெற்ற அந்த பாகிஸ்தானின் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் நடைபெற்றன. அதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் போராடி சமன் செய்த இந்தியாவை அடுத்த நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வீழ்த்திய பாகிஸ்தான் வெற்றியுடன் நாடு திரும்பியது.

இந்நிலையில் அந்த தொடரில் டெல்லியில் நடைபெற்ற 3வது போட்டியில் தமக்கு கிடைக்க வேண்டிய ஆட்டநாயகன் விருது இந்தியாவின் எம்எஸ் தோனிக்கு கொடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

அது என்னுடைய துரதிஷ்டம் என்று நினைக்கிறேன். 2013இல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் நான் அபாரமாக பந்து வீசியதால் நாங்கள் அந்த 2 போட்டிகளையும் வென்றோம். அதே போல 3வது போட்டியிலும் 175 ரன்களுக்குள் நாங்கள் இந்தியாவை சுருட்டினோம்.

நான் மட்டும் அதில் 5 விக்கெட்டுகளை எடுத்தேன். அதன் பின் சேசிங் செய்யும் போது நிறைய விக்கெட்டுகளை கைவசம் வைத்திருந்த போதே 100 ரன்களை எட்டிய நாங்கள் கடைசியில் தோற்றோம்.

அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது எம்எஸ் தோனிக்கு கொடுக்கப்பட்டது. குறிப்பாக அந்த போட்டியில் அவர் வெறும் 18 ரன்கள் அடித்து 2 கேட்ச்களை தவற விட்டும் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது மிகவும் தவறானது. பொதுவாக ஆட்டநாயகன் விருது எதற்காக கொடுப்பார்கள்? என்று நீங்கள் சொல்லுங்கள். அந்த குறிப்பிட்ட போட்டியில் சிறப்பாக செயல்படுபவருக்கு தானே ஆட்டநாயகன் விருது கொடுக்கப்படும்.

அப்படிப்பட்ட நிலையில் நான் 5 விக்கெட்டுகளை எடுத்தும் இந்தியா வென்ற காரணத்தால் அந்த விருதை அவர்கள் தோனிக்கு கொடுத்தனர். ஆனால் 18 – 20 ரன்களை மட்டுமே எடுத்து சில கேட்ச்களை தவற விட்ட அவருக்கு எப்படி அந்த விருதை கொடுத்தீர்கள்? மாறாக அது எனக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 43.4 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக தோனி 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் சயீத் அஜ்மல் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை துரத்திய பாகிஸ்தான் 48.5 ஓவரில்157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியாவின் வெற்றியை தீர்மானித்த முக்கிய ரன்களை எடுத்த தோனி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆனால் அந்த போட்டியில் வெறும் 18 – 20 ரன்கள் (36) மட்டுமே எடுத்து விக்கெட் கீப்பராக 2 கேட்ச்களை கோட்டை விட்டு சுமாராகவே செயல்பட்ட தோனிக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்ததாக சயீத் அஜ்மல் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்