சென்னை-குஜராத் அணிகள் இடையே நடக்க இருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழையால் பாதிப்பு - இன்று நடைபெறும் என்று அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடக்க இருந்த சென்னை-குஜராத் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி மழையால் தடைபட்டது. அந்த ஆட்டம் இன்றிரவு நடைபெறுகிறது.

Update: 2023-05-29 00:28 GMT

image courtesy: IndianPremierLeague twitter

ஆமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இங்கு ஒரு லட்சம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளிப்பார்கள் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர்.

ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை புகுந்து விளையாடியது. இடி, மின்னலுடன் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. எப்போது மழை ஓய்ந்து ஆட்டம் தொடங்கும், வருணபகவான் கருணை காட்டுவாரா? என்று ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். இன்னொரு பக்கம் ஆட்டம் தாமதமானால் எத்தனை ஓவர்கள் வைத்து நடத்துவது என்று கணக்கீடுகளும் ஜரூராக நடந்தன.

இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் மழை நின்றது. இதனால் மைதான ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மழை மீண்டும் பெய்தது. கனமழை காரணமாக இரவு 10 மணியை தாண்டியும் போட்டி தொடங்கவில்லை.

குறைந்தது 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தலாம் என்று முயற்சித்தனர். அதற்கும் மழை வழிவிடவில்லை. இதனால் வீரர்கள் மட்டுமின்றி விடுமுறை நாளில் இறுதியுத்தத்தை காண ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.

தொடர்ந்து மழை நீடித்ததால் மாற்றுநாளான இன்று (திங்கட்கிழமை, இரவு 7.30 மணி) இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் நேற்றிரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

மாற்று நாளான இன்றும் மழையால் இறுதிப்போட்டியை நடத்த இயலாமல் போனால் அதன் பிறகு ஆட்டம் கைவிடப்பட்டு லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்து மும்பை அணியின் சாதனையை சமன் செய்யுமா? அல்லது குஜராத் கோப்பையை தக்கவைக்குமா? என்பதை அறிய மேலும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்