"இந்தியாவுடனான ஆட்டம் பரபரப்பாக இருக்கும்" - தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம்
விராட் கோலியை எதிர்கொள்ள தென் ஆப்பிரிக்க பவுலர்கள் தயாராக இருப்பதாக எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புபான கட்டத்தை எட்டியுள்ளது. 2 குரூப்களாக நடைபெற்று வரும் லீக் சுற்று வரும் நவம்பர் 6-ந்தேதி முடிவடையவுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் (பாகிஸ்தான் ,நெதர்லாந்து) அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 3-வது போட்டியில் நாளை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.
இரண்டு போட்டிகளிலும் அரைசதம் விளாசி சூப்பர் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி மீதே தற்போது மொத்த கவனமும் குவிந்துள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடாவும், அன்ட்ரிச் நார்ஜேவும் விராட் கோலியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
பெர்த் மைதானத்தின் எக்ஸ்ட்ரா பவுன்ஸை தென் ஆப்பிரிக்க பவுலர்கள் சிறந்த முறையில் பயன்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், இந்தியாவுடனான ஆட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.