முதலாவது டி20; பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து..!
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.;
ஆக்லாந்து,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி பாகிஸ்தான்- நியூசிலாந்து இடையிலான முதலாவது டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பின் ஆலன் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். வெறும் 15 பந்துகளில் 35 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கை கோர்த்த வில்லியம்சன் - டேரில் மிட்செல் இணை அதிரடியாக விளையாடி அணியை வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்தது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில் வில்லியம்சன் 57 ரன்களிலும், அவரை தொடர்ந்து டேரில் மிட்செல் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் மார்க் சாப்மேன் அதிரடியாக விளையாடினார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 226 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் வெறும் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் ஷாகின் அப்ரிடி மற்றும் அப்பாஸ் அப்ரிடி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாட உள்ளது.