பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராக இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டத்தை அறிவித்த ஆஸ்திரேலிய வாரியம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

Update: 2024-08-10 04:51 GMT

image courtesy: AFP

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் - கவாஸ்கர் தொடர்) ஆட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த முறை 5 ஆட்டங்கள் கொண்ட தொடராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. 2வது போட்டியான பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3வது போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்திலும், 4வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்திலும், 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி சிட்னி மைதானத்திலும் தொடங்குகிறது.

முன்னதாக 2020/21 பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடரில் அடிலெய்டு நகரில் நடைபெற்ற முதல் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் நிற பந்தில் நடைபெற்றது. ஆனால் அதற்கு முழுமையாக தயாராகாமல் களமிறங்கிய இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் அங்கிருந்து மீண்டெழுந்து கடைசியில் தொடரை வென்று அசத்தியது.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராக உதவும் வகையில் பயிற்சி போட்டி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின், நவம்பர் 30 - டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கான்பெரா நகரில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இந்திய அணி பகலிரவு பயிற்சி போட்டியில் விளையாடும் என்று அந்நாட்டு வாரியத்தின் இயக்குனர் நிக் ஹாக்லி அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்