இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Update: 2024-07-18 02:27 GMT

நாட்டிங்காம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலாவது டெஸ்டுடன் விடைபெற்றார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கடந்த ஆண்டுடன் ஓய்வு பெற்றார். இவ்விரு வேகப்பந்து சூறாவளிகள் இல்லாமல் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் களம் காணுவது 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

மற்றபடி இங்கிலாந்து பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ளது. ஆண்டர்சன் வெளியேறியதால் அட்கிட்சனும், கிறிஸ் வோக்சும் தொடக்க பவுலர்களாக பந்து வீச்சு தாக்குதலை தொடுப்பார்கள் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் கிர்க் மெக்கென்சி, மிக்கைல் லூயிஸ், அலிக் அதானேஸ், கவெம் ஹாட்ஜ், கேப்டன் பிராத்வெய்ட் உள்ளிட்டோர் கணிசமாக ரன் எடுக்க வேண்டியது அவசியமாகும். இதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமார் ஜோசப், அல்ஜாரி ஜோசப், ஜாசன் ஹோல்டர் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது முக்கியம்.

இந்த ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் உள்ளன. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலையை பொறுத்தவரை 3-வது நாளில் இருந்து லேசான மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. உள்ளூர் சூழலில் இங்கிலாந்தின் வீறுநடையை வெஸ்ட் இண்டீஸ் தடுப்பது கடினம் தான்.

பிற்பகல் 3.30 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்