இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இவர்கள் வருகையால் இந்திய அணி வலிமை பெறும் - இயான் சேப்பல்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.;
புதுடெல்லி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய முன்னணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாடவில்லை. ஆனால், இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கே.எல்.ராகுல், ஜடேஜா வருகையால் இந்திய அணி வலிமை பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியா ஒரு வலிமையான அணியாகும். அவர்களுக்கு திறமையான கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். காயத்தில் இருந்து குணமடைந்த ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரும் இந்திய அணியை வலிமைப்படுத்துவார்கள். ஆனால் விராட்கோலி எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்பது இந்திய அணிக்கு இழப்பாகும்.
தேர்வு குழுவினர் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் திறமையை மிகைப்படுத்தி மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, குல்தீப் யாதவின் பந்துவீச்சு திறனை அதிகமாக மதிப்பிட கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிராக முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் மோசமான பேட்டிங் செய்த காரணத்தினால் தான் ஸ்ரேயாஸ் ஐயர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.