டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது...அதை நாம் பாதுகாக்க வேண்டியது முக்கியம் - ரோகித் சர்மா
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.;
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆனால், அந்த சமயத்தில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டி நடப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.
இதனால் இதுவரை சர்வதேச போட்டியில் ஆடாத நீல் பிராண்ட் என்ற வீரர் தலைமையில் 2-ம் தர அணி நியூசிலாந்துக்கு அனுப்பப்படுகிறது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஸ்டீவ் வாக், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தங்களது கண்டங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
நான் நேர்மையாக சொல்கிறேன், என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது. டெஸ்ட் கிரிக்கெட் பார்மெட்டில்தான் சிறந்த வீரர்கள் விளையாடுவதை பார்க்க முடியும். ஆனால், ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்சினைகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து எனக்கு தெரியாது.
டெஸ்ட்டை பொறுத்தவரை தலைச்சிறந்த வீரர்கள் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்றே எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் இது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் உள்விவகாரம். அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும். அது தான், ஒவ்வொரு நாளும் சவால் அளிக்கக்கூடிய போட்டி.
எங்களுக்கு இது போன்ற பிரச்சினை இதுவரை வந்ததில்லை. டெஸ்ட் கிரிக்கெட் நிலைத்து நிற்க, அதை நாம் பாதுகாக்க வேண்டியது முக்கியம். டெஸ்ட் கிரிக்கெட்டை அழகாகவும் பொழுதுபோக்காகவும் வைத்திருப்பதை உறுதி செய்வது அனைத்து நாடுகளின் பொறுப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.