அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 369 ரன்கள் குவிப்பு
அயர்லாந்து அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்து திணறியது.
மிர்புர்,
அயர்லாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 12 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மொமினுல் ஹக் 17 ரன்னில் மார்க் அடைர் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனையடுத்து கேப்டன் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷகிப் அல்-ஹசன் 87 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 135 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 10-வது சதம் இதுவாகும்.
அவருடன் இணைந்த லிட்டான் தாஸ் 43 ரன்னில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 126 ரன்னில் (166 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆன்டி மெக்பிர்னி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் நடையை கட்டினர். கடைசி விக்கெட்டாக மெஹிதி ஹசன் மிராஸ் 55 ரன்னில் வீழ்ந்தார். 80.3 ஓவர்களில் வங்காளதேச அணி 369 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆன்டி மெக்பிரின் 6 விக்கெட்டும், மார்க் அடைர், பென் ஒயிட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்து திணறியது. ஹாரி டெக்டர் 8 ரன்னுடனும், பீட்டர் மூர் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.