டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு- ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

Update: 2023-06-02 10:40 GMT

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது.பந்து வீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது. எனவே பொதுவான அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடப் போகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன்.

ஒருவேளை இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும். மேலும் 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம். அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்