வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் - 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி தடுமாற்றம்

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது

Update: 2023-12-01 13:52 GMT

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வில்லியம்சனின் சதம் மூலம் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணி தரப்பில் ஷாண்டோ 105 ரன், ரஹீம் 67 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து , கான்வே 22 ரன்கள் எடுத்து அவுட்  ஆனார்

இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் 11 ரன்கள், நிக்கோல்ஸ் 2 ரன்கள், டாம் ப்ளண்டெல் 6 ரன்கள், பிளிப்ஸ் 12 ரன்கள், ஜெமிசன் 9 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. மிட்செல் 44 ரன்களிலும் சோதி 7 ரன்களிலும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்