தன்சித் ஹசன் அதிரடி...இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்

வங்காளதேசம் - இலங்கை இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

Update: 2024-03-18 12:27 GMT

image courtesy: twitter/@ICC

சட்டோகிராம்,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வங்காளதேசத்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.2 ஓவர்களிலேயே 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜனித் லியனகே சதமடித்தார். வங்காளதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். அவருக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த ரிஷாத் ஹொசைன் வெறும் 18 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அணியின் வெற்றியில் பங்காற்றினார்.

வெறும் 40.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த வங்காளதேசம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய தன்சித் ஹசன் 84 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ரிஷாத் ஹொசைன் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும், நஜ்மூல் ஹொசைன் சாண்டோ தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

Tags:    

மேலும் செய்திகள்