இலங்கை அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 191 ரன்களில் ஆல் அவுட்

தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.;

Update:2024-11-28 16:07 IST

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இலங்கையின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மார்க்ரம் (9 ரன்), டோனி டி ஜோர்ஜி (4 ரன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (16 ரன்), டேவிட் பெடிங்ஹாம் (4 ரன்) வரிசையாக நடையை கட்டினர். 20.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

தொடர்ச்சியாக மழை பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் பவுமா 28 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் பவுமா ஒருபுறம் நிலைத்து நின்றாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. இறுதி கட்டத்தில் கேஷவ் மகராஜ், பவுமா உடன் சிறிது நேரம் நிலைத்து நிற்க அணி கவுரவமான நிலையை எட்டியது.

சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த பவுமா 70 ரன்களிலும், கேஷவ் மகராஜ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா & விஷ்வா பெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து இலங்கை முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்