ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய வீரர்களால் அதை செய்ய முடியாது - இந்திய வீரருக்கு டிராவிட் பாராட்டு

ஜெய்ஸ்வால் இன்னும் சிறப்பாக விளையாடி பெரியளவில் வளர்வார் என்று டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-28 08:14 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் அசத்தினர். இதன் காரணமாக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் பேட்டிங்கில் ஜொலித்த ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் இப்போதுதான் முதல் முறையாக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான அவர் 2வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அறிமுக போட்டியிலேயே அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்தார்.

இந்நிலையில் கடினமான ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியிலேயே நிறைய இந்திய வீரர்கள் இப்படி சதம் அடித்ததில்லை என்று அவரை முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். அத்துடன் ஜெயஸ்வால் இன்னும் சிறப்பாக முன்னேறி பெரியளவில் வளர்வார் என்றும் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஜெய்ஸ்வால் தம்முடைய பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடுகிறார். அவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமானவர் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. அந்தளவுக்கு அவர் நன்றாக விளையாடுகிறார். அவர் விளையாடி நீண்ட காலமாகவில்லை. இப்போதுதான் தொடங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்று பெர்த் மைதானத்தில் முதல் போட்டியிலேயே அவர் சதத்தை அடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய வீரர்களால் அதை செய்ய முடியாது. அவர் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டுள்ளார். எனவே அவர் இனி முன்னேற்றத்தை மட்டுமே சந்திப்பார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்