டி20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி வரலாறு படைத்த உகாண்டா
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி உகாண்டா வெற்றி பெற்றது.
கயானா,
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா - உகாண்டா அணிகள் மோதின. கயானா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணியின் கேப்டன் பிரையன் மசாபா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா, உகாண்டா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 77 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். உகாண்டா தரப்பில் அல்பேஷ், காஸ்மாஸ் கியேவுடா, ஜுமா மியாகி மற்றும் நசுபுகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 78 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய உகாண்டா அணிக்கு பப்புவா நியூ கினியா கடும் சவால் கொடுத்தது. இருப்பினும் அந்த அணியின் பேட்ஸ்மேன் ரியாசத் அலி ஷா நிலைத்து விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ரன்கள் அடித்த உகாண்டா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.