மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்...டிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட்
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.
பிரிஸ்பேன்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் பும்ரா 10 ரன்னுடனும், ஆகாஷ் தீப் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தியா 193 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இன்று பேட்டிங்கை தொடங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 260 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ராகுல் 84 ரன்னும், ஜடேஜா 77 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டை இழந்து 89 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 22 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் இந்தியாவுக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஆனது. இதையடுத்து இரு கேப்டன்களும் இந்த போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டதால் இந்த ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரில் இதுவரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.