டி20 உலகக்கோப்பை: முதல் போட்டியில் நாங்கள் வெற்றி பெற அவர்தான் காரணம் - ரோகித்

டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

Update: 2024-06-06 09:25 GMT

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ், அக்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா வெறும் 12.2 ஓவர்களிலேயே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 52 ரன்களும், பண்ட் 36 ரன்களும் அடித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

" இந்த மைதானம் நாங்கள் நினைத்த மாதிரி இல்லை. முதல் இன்னிங்சின்போது எவ்வாறு இருந்ததோ அதேபோன்று நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருந்தது. இருந்தாலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று விட்டோம். இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் பந்துகளை வீசினர். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாத அர்ஷ்தீப் சிங் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டை எடுத்து எங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அதன் பின்னர் மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட அவர்களை எளிதாக நிறுத்த முடிந்தது. இந்த மைதானம் இனிவரும் போட்டிகளில் எவ்வாறு செயல்படும் என்பதை உண்மையிலேயே என்னால் கணிக்க முடியவில்லை. அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இதே மைதானத்தில் விளையாட இருப்பதால் நிறைய தயாராக வேண்டியுள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் மைதானத்தின் தன்மையை பொறுத்தே அமையும்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்