அவர்கள் பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது - பேட் கம்மின்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

Update: 2024-04-21 06:52 GMT

Image Courtesy: X (Twitter)

டெல்லி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்கள் அடித்தார்.

ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐதராபாத் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, மீண்டும் ஒரு நல்ல ரெகார்ட் போட்டி இங்கு நடைபெற்றுள்ளது. மற்றொரு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி. முதலில் விளையாடி பெரிய ரன்களை குவித்தோம். அதன் பின்னர் டெல்லி அணி விளையாடும்போது பவர்பிளே ஓவர்களில் எங்களால் பெரிய அளவில் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை.

இருப்பினும் பந்து சாப்ட் ஆன பின்னர் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். முதல் பாதியில் எங்களது பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் (ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா) பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. பின்னர் இரண்டாவது பாதியில் பந்துவீச்சிலும் ஒழுக்கமான முறையில் பந்து வீசியிருந்தோம். எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்களது திட்டத்தை சரியாக வகுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடித் தந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்