சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம்...மேக்ஸ்வெல், ரோகித்தின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்..!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
ஜோகன்ஸ்பர்க்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி சதம் அடித்து அசத்தினார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ( இருவரும் தலா 4 சதம் ) உடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.
ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும், மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி 4 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.