எஸ்.ஏ. 20 ஓவர் கிரிக்கெட்: பட்டத்தை வென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசு

சன்ரைசர்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று பட்டத்தை தக்கவைத்தது.

Update: 2024-02-12 00:25 GMT

Image Courtacy: SA20_League

கேப்டவுன்,

2-வது எஸ்.ஏ. 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கேஷவ் மகராஜ் தலைமையிலான டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் கேப்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது. டாம் அபெல் (55 ரன், 34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (56 ரன், 30 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, குயின்டான் டி காக் (3 ரன்), ஸ்மட்ஸ் (1 ரன்), பானுகா ராஜபக்சே (0), கிளாசென் (0) ஆகியோரின் சொதப்பதால் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. 17 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 115 ரன்னில் அடங்கியது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் 89 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று பட்டத்தை தக்கவைத்தது. வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

வாகை சூடிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஏறக்குறைய ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடித்த சூப்பர் ஜெயன்ட்சுக்கு ரூ.7 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் தான், தென்ஆப்பிரிக்காவில் உள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்