ஒரு காலத்தில் விராட் கோலி என் தலைமையின் கீழ் விளையாடி உள்ளார் - தேஜஸ்வி யாதவ் பேட்டி

விராட் கோலி ஒரு காலத்தில் தம்முடைய தலைமையில் விளையாடியவர் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

Update: 2024-09-15 16:32 GMT

புதுடெல்லி,

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வரும் அவர், இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும் கேப்டனாகவும் செயல்பட்ட அவருடைய தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அத்துடன் பிட்னசுக்கு அடையாளமாக திகழும் விராட் கோலி இந்தியா மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரராக வலம் வருகிறார்.

இந்நிலையில் இன்று இந்தளவுக்கு பெரிதாக வளர்ந்துள்ள விராட் கோலி ஒரு காலத்தில் தம்முடைய தலைமையில் விளையாடியவர் என்பதை யாரும் பேசுவதில்லை என தேஜஸ்வி யாதவ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. "நான் ஒரு கிரிக்கெட்டர். ஆனால் அதைப் பற்றி யாருமே பேசுவதில்லை. விராட் கோலி என்னுடைய கேப்டன்ஷிப் தலைமையில் விளையாடினார். இதைப்பற்றி யாராவது பேசினீர்களா? ஏன் அதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. தொழில் முறையில் நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். இந்திய அணியில் தற்போதுள்ள பெரும்பாலானவர்கள் ஒரு கட்டத்தில் என்னுடைய சக வீரர்கள். இருப்பினும் என்னுடைய இரண்டு தசை நார்களும் காயமடைந்ததால் நான் கிரிக்கெட்டில் இருந்து விலகினேன். அது அப்படியே இருக்கட்டும்" என்று கூறினார்.

ஜார்கண்ட் அணிக்காக 2 லிஸ்ட் ஏ மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தேஜஸ்வி 37 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்துள்ளார். அதே போல ஐபிஎல் தொடரில் 2008 - 2012 வரை டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்