ரஞ்சி டிராபி: உத்தரகாண்ட் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி - அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா...!

ரஞ்சி தொடரின் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜார்கண்ட்டை வீழ்த்தி பெங்கால் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Update: 2023-02-03 10:36 GMT

கோப்புப்படம் 

பெங்களூரு,

ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, பெங்கால், ஆந்திரா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், சவுராஷ்டிரா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

இதில் காலிறுதி ஆட்டங்களில் ஜார்கண்ட்-பெங்கால், ஆந்திரா-மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா-பஞ்சாப், உத்தரகண்ட்-கர்நாடகா அணிகள் மோதின.

இதில் ஜார்கண்ட்-பெங்கால் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜார்கண்ட் அணியில் குமார் சுராஜ் மட்டுமே சிறப்பாக ஆடி 89 ரன்கள் அடிக்க, மற்ற அனைவரும் சொதப்ப, முதல் இன்னிங்ஸில் ஜார்கண்ட் அணி 173 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பெங்கால் அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் (77), சுதிப் கராமி (68) மற்றும் ஷபாஸ் அகமது (82) ஆகிய மூவரும் அரைசதம் அடிக்க, பெங்கால் அணி 328 ரன்கள் அடித்தது.

பின்னர் 155 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஜார்கண்ட் அணி 221 ரன்கள் அடித்தது. மொத்தமாக 66 ரன்கள் மட்டுமே ஜார்கண்ட் அணி முன்னிலை பெற, 67 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் அணிகளுக்கு இடையேயான மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய உத்தரகண்ட் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகா அணியின் டாப் 4 வீரர்களும் அரைசதம் அடித்தனர். சமர்த் (82), மயன்க் அகர்வால் (83), தேவ்தத் படிக்கல் (69) மற்றும் நிகின் ஜோஸ் (62) ஆகிய நால்வரும் அரைசதம் அடித்தனர். 6ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் கோபால் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.

சதத்திற்கு பின்னும் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் கோபால், 161 ரன்களை குவித்து பெரிய இன்னிங்ஸ் ஆடினார். அவரது அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 606 ரன்களை குவித்தது. 490 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய உத்தரகண்ட் அணி் வெறும் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கர்நாடகா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்