ரச்சின் ரவீந்திரா அபார பந்துவீச்சு...டெக்சாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற வாஷிங்டன் ப்ரீடம்
வாஷிங்டன் ப்ரீடம் தரப்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
டல்லாஸ்,
6 அணிகள் கலந்து கொண்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் வாஷிங்டன் ப்ரீடம் - டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ப்ரீடம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 57 ரன், டிராவிஸ் ஹெட் 53 ரன் எடுத்தனர். டெக்சாஸ் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெக்சாஸ் அணி களம் புகுந்தது. டெக்சாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கான்வே 16 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து டு பிளெஸ்சிஸ் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் ஆரோன் ஹார்டி 19 ரன், ஜோசுவா ட்ராம்ப் 2 ரன், மார்கஸ் ஸ்டோனிஸ் 16 ரன், மிலிந்த் குமார் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய டு பிளெஸ்சிஸ் அரைசதம் அடித்த நிலையில் 55 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் டெக்சாஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 42 ரன் வித்தியாசத்தில் வாஷிங்டன் ப்ரீடம் அணி வெற்றி பெற்றது. வாஷிங்டன் ப்ரீடம் தரப்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட் வீழ்த்தினார்.