'பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடும்' - ஐ.சி.சி. நம்பிக்கை
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து உலகக் கோப்பையில் விளையாடும் என்று நம்புவதாக ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.;
மும்பை,
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாத வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி கிடையாது என்பது இந்திய அரசின் நிலைப்பாடாகும். 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்திய அணி நேரடி போட்டிகளில் விளையாடவில்லை. பாகிஸ்தானுடன் உறவு சீராக இல்லாததால் தற்போது கூட இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட மறுத்தது. ஆனால் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் மட்டும் பொதுவான இடத்தில் மோதுகின்றன.
இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் இன்னும் உறுதி செய்யவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'இந்த உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் பங்கேற்பது என்பது எங்கள் அரசாங்கம் வழங்கும் அனுமதியை பொறுத்தே அமையும். இதை ஐ.சி.சி.யிடம் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டோம். முதலில் இந்தியாவுக்கு செல்வதற்கு அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்த பிறகே மைதானம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பேச முடியும்' என்றார்.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செய்தி தொடர்பாளர் நேற்று கூறுகையில், 'ஐ.சி.சி.யில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து தான் ஆக வேண்டும். நாங்களும் அதை மதிக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடும் என்று நம்புகிறோம்' என்றார்.
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தங்களது லீக் ஆட்டங்களை ஆமதாபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய இடங்களில் விளையாடுகிறது. ஒருவேளை அரைஇறுதியில் இந்தியாவுடன் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதும் நிலை உருவானால், அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்படும். ஏனெனில் பாகிஸ்தான் அணி மும்பையில் விளையாடினால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படலாம் என்பதால் ஐ.சி.சி. இந்த முடிவை எடுத்திருக்கிறது.
அதே சமயம் அவர்களின் மற்றொரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு உகந்த சென்னை சேப்பாக்கத்தில் ஆப்கானிஸ்தானுடன் ஆட விரும்பவில்லை. அந்த ஆட்டத்தை பெங்களூருவுக்கு மாற்ற வேண்டும். இதே போல் பேட்டிங்குக்கு உகந்த பெங்களூருவில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆட விரும்பவில்லை. அந்த ஆட்டத்தை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவற்றை ஏற்றுக்கொள்ள ஐ.சி.சி. மறுத்து விட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தலை தவிர மற்ற காரணங்களுக்காக போட்டியை மாற்றுவதற்கு சாத்தியமில்லை என்று ஐ.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.