'25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம்'- தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டி
25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம் என்று தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சுக்கு பதிலடி கொடுத்து 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 8 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுத்து 4-வது தோல்வியை சந்தித்தது.
49 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 103 ரன்கள் குவித்து ஐ.பி.எல். போட்டியில் முதல் சதம் விளாசிய மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவரது அபாரமான பேட்டிங்கை தெண்டுல்கர் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர். ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தியதுடன் ஆட்டம் இழக்காமல் 79 ரன்கள் (32 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) குவித்தாலும் அது அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.
தோல்வி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருத்து தெரிவிக்கையில், 'எங்கள் அணியில் ரஷித் கான் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்த விதம் அருமையானது. இந்த தோல்வியால் அணியில் பெரிதாக மாற்றம் செய்ய தேவையில்லை என்று நினைக்கிறேன். பந்து வீச்சாளர்கள் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.
நாங்கள் 25 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். சூர்யகுமார் யாதவ் குறித்து போதுமான அளவு பேசிவிட்டனர். அவர் 20 ஓவர் போட்டியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவருக்கு பீல்டிங் அமைப்பது என்பது கடினமான காரியமாகும். அவருக்கு எதிராக நீங்கள் திட்டத்தை சரியாக அமல்படுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை நிரூபித்து காட்டினார்' என்றார்.