ஒருநாள் கிரிக்கெட்; ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இன்று 2-வது போட்டி
ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.;
ஹம்பன்தோடா,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதுகிறது. இப்போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்களில் ஆட்டமிழந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும்.
இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுப் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் பாகிஸ்தான் அணி தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. தொடரை இழக்க கூடாது என்பதில் ஆப்கானிஸ்தான் அணியினர் தீவிரமாக உள்ளனர். இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.