பவுலிங் அல்ல...அஸ்வினின் அந்த திறமையை இந்தியா சரியாக பயன்படுத்தவில்லை - கம்பீர் ஆதங்கம்

ரவிச்சந்திரன் அஸ்வினின் பேட்டிங் திறமையை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கவுதம் கம்பீர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-22 06:35 GMT

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு இந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடர்களில் சிறப்பாக விளையாடி தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

2017 சாம்பியன்ஸ் டிராபி வரை அஸ்வின் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை ஸ்பின்னராக இருந்தார். அதன் பின் இந்திய அணி நிர்வாகம் அவரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து கழற்றி விட்டது. அத்துடன் ஐ.சி.சி. தரவரிசையில் நம்பர் 1 பவுலராக இருந்தும் இந்திய அணி நிர்வாகம் அவரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெஞ்சில் அமர வைத்தது தோல்வியை கொடுத்தது.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பேட்டிங் திறமையை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கவுதம் கம்பீர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து கம்பீர் பேசியது பின்வருமாறு:- "100-வது டெஸ்ட், 500 விக்கெட்டுகள் போன்ற பல விஷயங்களுக்காக அஸ்வினை நான் வாழ்த்த விரும்புகிறேன். அதே சமயம் நான் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருக்கிறேன். ஏனெனில் பேட்டிங்கில் அவரிடம் இருக்கும் திறமையை இந்த நாடு சரியாக பார்க்கவில்லை. குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில்.

இதை நான் நீண்ட காலத்திற்கு முன்பாகவே கூறியிருக்கிறேன். எப்போது கூறினேன் என்று சரியாக தெரியவில்லை. அவர் இந்திய அணிக்காக பேட்டிங்கில் 5, 6 அல்லது 4-வது இடத்தில் கூட விளையாடியிருக்க வேண்டும். அதுதான் இந்த நாடு தவற விட்ட ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். அவர்கள் பவுலிங் திறமையை பார்த்தனர். ஆனால் அவருடைய பேட்டிங்கில் இருக்கும் திறமையை பார்க்கவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்