தோனி, ரோகித், கோலி இல்லை.. நான் பார்த்ததிலேயே மிகவும் திறமையான வீரர் அவர்தான் - அஸ்வின்

அஸ்வின் தாம் பார்த்ததிலேயே திறமை வாய்ந்த வீரர் யார்? என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-02 07:25 GMT

image courtesy: PTI

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி உள்ளார்.

மேலும், 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் இதுவரை 516 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடர்களில் சிறப்பாக விளையாடி தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

இந்த நிலையில் தாம் பார்த்ததிலேயே சிறந்த திறமை வாய்ந்த வீரர் என்றால் அது ஜடேஜாதான் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் பார்த்ததிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என்றால் அது ஜடேஜாதான். ஜடேஜாவுக்கு இயற்கையிலேயே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என்று மூன்று பிரிவிலும் திறமை இருக்கின்றது. நாங்கள் பல ஆண்டுகள் இணைந்து விளையாடியதில் இருந்து எங்களுடைய உறவு முன்னேறியது. நாங்கள் இருவருமே மிகவும் வித்தியாசமானவர்கள். நாங்கள் இருவரும் புரிந்து கொண்டு பந்து வீச்சில், பார்ட்னர்ஷிப் அமைக்க சிறிது காலம் தேவைப்பட்டது. வெளிநாடுகளில் விளையாடும்போது பிளேயிங் லெவனில் எனக்கு இடம் கிடைக்காது. இருந்தபோதும் எங்கள் இருவருக்கும் எந்த ஒரு உறவில் பாதிப்பும் இல்லை.

இது எங்கள் அணியில் உள்ள சிக்கலாக தான் கருதுகிறேன். இதில் ஜடேஜாவின் தவறு எதுவும் கிடையாது. ஜடேஜாவுக்கு நிகராக நான் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பது குறித்து நான் யோசிக்க வேண்டும். இதற்காக ஜடேஜாவை நான் கடத்தி வீட்டில் வைத்திருக்கவா முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்கள் பொறாமை இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் களத்திற்கு தேவையான வீரர்களைத்தான் தேர்வு செய்ய முடியும். அணியில் 11 வீரர்கள்தான் இருக்க முடியும்.

நாங்கள் அனைவருமே ஒரே அணிக்காகத்தான் விளையாடுகிறோம். வாய்ப்பு கிடைக்காத வீரர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.எனக்கு அணியில் இடம் வேண்டுமென்றால் நான் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்னால் ஜடேஜா மாதிரி பீல்டிங் செய்ய முடியாது. ஆனால் ஜடேஜாபோல் எப்படி சிறந்து விளங்க வேண்டும் என்பது குறித்து நான் யோசிக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்