அர்ஷ்தீப், மயங்க் இல்லை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்த அந்த பவுலர் இந்தியாவுக்கு அவசியம் - பாண்டிங்

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற அர்ஷ்தீப் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் விளையாடுவது அவசியம் என்று வாசிம் ஜாபர் தெரிவித்திருந்தார்.

Update: 2024-08-13 15:32 GMT

image courtesy: instagram/khaleelahmed13

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது.

அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. அதனால் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது

முன்னதாக இம்முறை ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோருடன் அர்ஷ்தீப் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் விளையாடுவது அவசியம் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இம்முறை இந்தியா அசத்துவதற்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அவசியம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கலீல் அகமது போன்ற ஒருவர் ஆஸ்திரேலிய மண்ணில் அசத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். சமீபத்தில் ஜிம்பாப்வே டி20 தொடரில் அவர் விளையாடினார் என்பது எனக்குத் தெரியும். இடது கை வீரரானவர் இந்திய அணியில் இடம் பிடிக்க ஏற்றவராக இருப்பார். அதற்குள் முகமது ஷமியும் பிட்டாகி வந்து விடுவார். முகமது சிராஜ் பந்து வீசுவர். கண்டிப்பாக பும்ராவும் இருப்பார். எனவே இம்முறை இரு அணிகளுமே வலுவான வீரர்களுடன் மோத உள்ளன" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்