கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்,;
கொல்கத்தா,
இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகினார். தேசிய கிரிக்கெட் அகாடமி டாக்டர்கள் குழுவின் ஆலோசனையின்படி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். காயத்துக்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். காயம் காரணமாக வருகிற 31-ந்தேதி தொடங்கும் 16-வது ஐ.பி.எல். போட்டியில் அவர் முழுமையாக விளையாட முடியாது என்று தெரிகிறது.
இதையடுத்து இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இடக்கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான 29 வயது நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ள நிதிஷ் ராணா 2018-ம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியில் அங்கம் வகிக்கிறார்.
புதிய கேப்டன் நியமனம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடாததால் அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா இருப்பார். ஸ்ரேயாஸ் காயத்தில் இருந்து குணமடைந்து இந்த சீசனில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஆடுவார் என்று நம்புகிறோம். நிதிஷ் ராணா வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் தனது மாநில அணிக்கு தலைமை தாங்கிய அனுபவம் மற்றும் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியுடனான பழக்கம் ஆகிவற்றால் கேப்டன் பணியில் சிறப்பாக செயல்படுவார். அவர் புதிய பொறுப்பில் சிறந்து விளங்கவும், ஸ்ரேயாஸ் காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வரவும் வாழ்த்துகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.