நியூசிலாந்து-இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் - முதல் போட்டி நாளை தொடக்கம்

நியூசிலாந்து-இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது.

Update: 2023-03-24 00:23 GMT

ஆக்லாந்து,

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இந்திய நேரப்படி நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து அணி டாம் லாதம் தலைமையிலும், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையிலும் களம் காணுகிறது.

டெஸ்ட் போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி அந்த ஆதிக்கத்தை ஒருநாள் தொடரிலும் நீட்டிக்க முயற்சிக்கும். அதேநேரத்தில் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த போட்டி பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து-இலங்கை அணிகள் இதுவரை 99 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் நியூசிலாந்தும், 41-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டையில் (சமனில்) முடிந்தது. 8 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

Tags:    

மேலும் செய்திகள்