டி20 கிரிக்கெட்; அதிக ரன்கள், குறைந்த பந்தில் சதம் மற்றும் அரைசதம்...! இன்னும் பல சாதனைகள் படைத்த நேபாளம்...!
ஆசிய விளையாட்டு போட்டிகளின் டி20 கிரிக்கெட்டில் நேபாள அணி பல சாதனைகளை படைத்துள்ளது.;
ஹாங்சோ,
ஆசிய விளையாட்டு போட்டிகளின் டி20 கிரிக்கெட்டில் குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம்-மங்கோலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதிரடியாக விளையாடிய நேபாளம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதன்மூலம் நேபாள அணி டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல அந்த அணியின் வீரர் திபேந்திர சிங் 9 பந்துகளில் 8 சிக்சர்கள் விளாசி அதிவேகமாக அரைசதம் அடித்தார். இதன் மூலம் அவர், 12 பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். கூடவே திபேந்திர சிங் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து யுவராஜ் சிங்கின் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் சாதனையையும் சமன்செய்தார்.
மேலும் அந்த அணியில் அதிரடியாக விளையாடிய வீரர் குஷல் மல்லா 50 பந்துகளில் 137 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அதிவேகமாக அதாவது 34 பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரானார். இதற்கு முன்னர் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
இதைத்தொடர்ந்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் 273 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றி பெற்றது. இதுவும் ஒரு சாதனையாகும். முன்னதாக செக் குடியரசு 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.