'ஷமி மீது கேஸ் போட மாட்டீங்க என நம்புகிறோம்'... மும்பை போலீசை ஜாலியாக கலாய்த்த டெல்லி போலீஸ்
சமியின் பந்து வீச்சை பாராட்டும் விதமாக மும்பை போலீசை கிண்டல் செய்து டெல்லி போலீசார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை வாரி குவித்து வருகிறது.;
மும்பை,
உலகக்கோப்பை நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக் கட்டுகள் போல சரித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
முகம்மது சமியின் சிறப்பான பந்து வீச்சை பாராட்டி நெட்டிசன்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். அந்த வகையில், சமியின் பந்து வீச்சை பாராட்டும் விதமாக டெல்லி போலீசார், மும்பை போலீசை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை வாரி குவித்து வருகிறது.
டெல்லி காவல் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று (நேற்று) நியூசிலாந்து அணி மீது முகமது ஷமி நடத்தியுள்ள கொடூர தாக்குதலுக்கு அவர் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்யாது என்று நம்புகிறோம் ' என கிண்டலாக பதிவிட்டு இருந்தது.
இதற்கு பதிலளித்த மும்பை போலீஸ் துறையின் சிறப்பு காவல் ஆணையர் தேவன் பார்தி, "அப்படி எதுவும் இல்லை, ஏனெனில் இது தற்காப்புக்காக நடத்திய தாக்குதலின் கீழ் வருகிறது" என்று பதிவிட்டு இருக்கிறார். டெல்லி மற்றும் மும்பை போலீசார் இடையே நடந்த ஜாலியான பதிவுகள் நெட்டிசன்கள் இடையே வைரலாக பரவி வருகிறது.