அதிரடியில் மிரட்டிய மில்லர்...குஜராத் அணி 177 ரன்கள் குவிப்பு...!
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
அகமதாபாத்,
ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சஹா ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்த்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து கில்லுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் 45 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து அபினவ் மனோகர் மில்லருடன் இணைந்தார். அதிரடியில் மிரட்டிய மனோகர் 13 பந்தில் 27 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்தது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆட உள்ளது.