விளையாட்டில் தவறு செய்வது இயல்பு, அதற்காக யாரையும் காயப்படுத்தாதீர்கள் - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்
விளையாட்டில் தவறு செய்வது இயல்பு, அதற்காக யாரையும் காயப்படுத்தாதீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.;
துபாய்,
ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் 18-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது, தான் ஆசிப் அலி களமிறங்கி இருந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0 ரன்) இருந்தார். அப்போது, ரவி பிஷ்னோய் வீசிய 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். அப்போது, பேட்டில் சரியாக படாததால் பந்து கீப்பருக்கு பின்னே கேட்ச் வாய்ப்பாக மாறியது. அங்கு நின்றுகொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார்.
ஆனால், மிகவும் சுலபமான அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். அந்த கேட்ச் தவறவிடப்பட்டது இந்தியா தோல்வியடைய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பலரும் கடுமையான விமர்சனங்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏராளமானோர் ஆத்ரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய முன்னாள் கேப்டன் கோலி இது பெரிய போட்டி, சூழ்நிலைகளும் சற்று இறுக்கமாக இருந்தது. அழுத்தமான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்த வீரர்கள் உங்களிடம் வருவார்கள்.. நீங்கள் (இளம் வீரர்கள்) அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும்' என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,
இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மனிதர்களாகிய நாம் விளையாட்டில் தவறு செய்வது இயல்பு. விளையாட்டில் நடைபெறும் தவறுக்காக யாரையும் காயப்படுத்தாதீர்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.