பும்ரா, ஆர்ச்சரை பாருங்கள்... - பாகிஸ்தான் அணியை விமர்சிக்கும் ரஷீத் லத்தீப்

பும்ரா, ஆர்ச்சர் போன்றவர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்தபோது கூட வேகம் குறையவில்லை ரசித் லதீப் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-26 15:56 GMT

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கு சொந்த மண்ணில் வங்காளதேசம் 565 ரன்கள் குவிக்கும் அளவுக்கு செயல்பட்ட பாகிஸ்தான் பவுலர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். அதே போல முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு முழு நேர ஸ்பின்னரை கூட பாகிஸ்தான் தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் போன்றவர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்த போது கூட வேகம் குறையவில்லை என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார். ஆனால் ஷாஹீன் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் பவுலர்களின் வேகம் 130க்கும் கீழே குறைந்து விட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "வேகம்தான் நம்முடைய பலம் என்பது உலகிற்கே தெரியும். ஆனால் தற்போது நம்முடைய டாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதே வேகத்தில் வீசுவதில்லை. அதுதான் முதல் போட்டியில் தோல்வியை சந்திக்க காரணம். அவர்களின் வேகம் அதிகமாக குறைந்து விட்டது. ஒருவேளை காயம் இருந்தால் அதை அவர்கள் வெளியே சொல்ல வேண்டும். ஷாஹீன், நசீம், குர்ராம் ஆகியோர் 145 கி.மீ வேகத்தில் தங்களது கெரியரை தொடங்கினர். ஆனால் தற்போது அவர்களுடைய வேகம் 130க்கு கீழே வந்து விட்டது. நம்முடைய பயிற்சியாளர்களை குறை சொல்ல வேண்டும்.

ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தை சந்தித்து 2 வருடங்கள் கழித்து வந்தார். அப்போதும் அவர் தனது வேகத்தை இழக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்த பின்பும் அதே வேகத்தில் வீசுகிறார். காயத்தால் நீண்ட காலம் விளையாடாத பேட் கம்மின்ஸ் மீண்டும் விளையாடியபோது வேகம் குறைந்ததாக தெரியவில்லை. ஆனால் நமது பவுலர்களின் வேகம் ஏன் குறைந்து விட்டது? இத்தனைக்கும் நமது பயிற்சியாளர்கள் தேவையான வேலையை செய்கின்றனர். இருப்பினும் வேகம் 144 கிலோமீட்டரில் இருந்து 128ஆக குறைந்து விட்டது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்