நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரரானார் கே.எல்.ராகுல்
லீக் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.;
பெங்களூரு,
உலகக்கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. அத்துடன், லீக் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆட்டத்தில் இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் சதமடித்தனர். ஸ்ரேயஸ் அய்யர் 128 ரன்களும், கே.எல்.ராகும் 102 ரன்களும் எடுத்தனர். இவர்களில் கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை மிரட்டினார்.அவர் 63 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார்.
இதன் மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதமடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். இதற்கு முன்பாக, சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா 64 பந்துகளில் சதமடித்ததே நடப்பு உலகக்கோப்பையில் இந்திய வீரரின் அதிவேக சதமாக இருந்தது. இதனை இன்று கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்தவர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மார்க்ரம் முதலிடத்தில் (49 பந்துகள்) உள்ளார்.