பழசை மறக்காத நிதினி..சி.எஸ்.கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி- வைரலாகும் அஸ்வின் வெளியிட்ட வீடியோ
மகாயா நிதினி 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. மேலும் கடைசியாக நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் சமன் செய்தது.
குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இந்தியா, அதன்பின் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனிடையே கேப்டவுனில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மகாயா நிதினியை நேரில் சந்தித்த அஸ்வின் அவருடன் பல்வேறு அம்சங்களை பற்றி விவாதித்தார்.
அப்போது " சிஎஸ்கே ரசிகர்களுக்காக நீங்கள் அவர்களுக்கு ஹலோ சொல்லுங்கள்" என அஸ்வின் அவரிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு உற்சாகத்தில் பொங்கி எழுந்த நிதினி வேடிக்கையான சில ரியாக்சன்களை கொடுத்தார். அத்துடன் "கபி கபி.. மேரா தில் மே" என்ற இந்தி பாடலை அவர் நகைச்சுவையாக அறையும் குறையுமாக பாடினார். அதை சற்றும் எதிர்பார்க்காத அஸ்வின் வாய்விட்டு சிரித்துவிட்டு அவரிடம் கை கொடுத்து மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாயா நிதினி 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.