ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதியில் இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்
ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரைஇறுதியில் இந்தியா-நியூசிலாந்து நாளை (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.;
போட்செப்ஸ்ட்ரூம்,
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின. அவை சூப்பர் சிக்ஸ் பிரிவில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதில் நேற்றுடன் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.
போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (குரூப் 2) இங்கிலாந்து அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.
ஆனால் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. குரூப்2-ல் இங்கிலாந்து அணி முதலிடத்தையும் (8 புள்ளி), நியூசிலாந்து (8 புள்ளி) 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் இந்தியா-நியூசிலாந்து அணியும், 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணியும் மோதுகின்றன