ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; போட்டி அட்டவணையை வெளியிட்ட ஐசிசி...!

ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உடபட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

Update: 2023-12-12 02:28 GMT

Image Courtesy: @ICC

துபாய்,

ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உடபட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. ஜனவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்ததை அடுத்து இந்த தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-வில் நடப்புச் சாம்பியன் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகளும், குரூப் சி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும், குரூப் டி-யில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடருக்கான முதல் ஆட்டத்தில் ஜனவரி 19ம் தேதி அமெரிக்கா - அயர்லாந்து அணிகளும், தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 20ம் தேதி வங்காளதேசத்தை எதிர் கொள்ள உள்ளது. தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி பிப்ரவரி 6 முதல் 11 வரை நடைபெற உள்ளது.

இந்திய அணியின் போட்டி அட்டவணை விவரம்;

இந்தியா - வங்காளதேசம்: ஜனவரி 20

இந்தியா – அயர்லாந்து: ஜனவரி 25

இந்தியா – அமெரிக்கா: ஜனவரி 28.

Tags:    

மேலும் செய்திகள்