ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு 260 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி!
இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 62 ரன்கள் அடித்தார்.
துபாய்,
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆதர்ஷ் சிங், உதய் சஹாரன் மற்றும் சச்சின் தாஸ் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 62 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஜீஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 260 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.