ஜோஸ் இங்கிலிஸ் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா.!
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.
விசாகப்பட்டினம்,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார்.
அதன்படி, விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றுவரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவ் ஸ்மித்தும், ஷார்ட்டும் களமிறங்கினர். ஷார்ட் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜோஸ் இங்கிலிஸ், இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த இங்கிலிஸ், 47 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.