வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ஜடேஜா தரம் உயர்வு - ரூ.7 கோடி ஊதியம் கிடைக்கும்

கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தரம் உயர்த்தப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா ரூ.7 கோடி ஊதியம் பெறும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.;

Update: 2023-03-27 23:53 GMT

புதுடெல்லி,

கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தரம் உயர்த்தப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா ரூ.7 கோடி ஊதியம் பெறும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜடேஜாவுக்கு 'ஜாக்பாட்'

இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களை 4 பிரிவாக ஒப்பந்தம் செய்து ஊதியம் வழங்குகிறது. இதில் ஏ பிளசில் இடம் பெறும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.7 கோடியும், ஏ கிரேடுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

வீரர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப இந்த கிரேடு மாற்றி அமைக்கப்படும். இந்த நிலையில் 2022-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இறுதி செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.

இதன்படி இதுவரை 'ஏ'பிரிவில் இருந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 'ஏ பிளஸ்' கிரேடுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு கூடுதலாக ரூ.2 கோடி ஊதியம் கிடைக்கப்போகிறது. 'பி' பிரிவில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல், 'சி' யில் அங்கம் வகித்த 20 ஓவர் அணிக்கான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இருவரும் 'ஏ'-க்கு முன்னேறியுள்ளனர்.

ராகுலுக்கு சறுக்கல்

கடந்த சீசனில் 'ஏ' கிரேடில் இருந்த பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுலின் பேட்டிங் அண்மை காலமாக மெச்சும்படி இல்லாததால் 'பி'-க்கு தரம் இறக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது வருவாயில் ரூ.2 கோடி 'வெட்டு' விழுகிறது. இனி அவரது ஆண்டு ஊதியம் ரூ.3 கோடியாகும். அதே சமயம் 'சி'யில் இருந்த சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் இருவரும் 'பி' பிரிவுக்கு தாவியுள்ளனர். அஜிங்யா ரஹானே, இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வாகுமார், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, தீபக் சாஹர் உள்ளிட்டோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் ஒப்பந்தத்தில் புதிதாக (சி பிரிவு) இணைந்துள்ளனர்.

கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

ஏ பிளஸ்: ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, 'ஏ' பிரிவு: ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல், 'பி': புஜாரா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில். 'சி': உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங், கே.எஸ்.பரத்.

 

Tags:    

மேலும் செய்திகள்