'துணை கேப்டன் பதவிக்கு ஜடேஜா தகுதியானவர்' - முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து

ரஹானேவுக்கு ஏன் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள கடினமாக இருப்பதாக கங்குலி கூறியுள்ளார்.;

Update: 2023-06-30 00:22 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

"வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அஜிங்யா ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதை பின்னோக்கிய ஒரு முடிவு என்று சொல்லமாட்டேன். ஆனால் 18 மாதங்கள் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் டெஸ்ட் அணிக்கு திரும்பிய உடனே அவருக்கு துணை கேப்டன் பதவி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நீண்டகாலமாக டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார். அவர் இந்த பொறுப்புக்கு பொருத்தமானவர். தேர்வு விஷயத்தில் தொடர்ந்து ஒரே மாதிரியான நிலைத்தன்மை இருக்க வேண்டும்.

மூத்த வீரர் புஜாரா நீக்கப்பட்டு இருக்கிறார். புஜாரா விவகாரத்தில் எந்த மாதிரியான யோசனையில் இருக்கிறீர்கள் என்பதை அவருக்கு தேர்வாளர்கள் தெளிவுப்படுத்தி இருக்க வேண்டும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவர் தேவையா? அல்லது இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க விரும்புகிறீர்களா? என்பதை அவருக்கு துல்லியமாக தெரியப்படுத்த வேண்டும்.

இளம் வீரர் ஜெய்ஸ்வால், ரஞ்சி கிரிக்கெட்டில் நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். இரானி கோப்பை, துலீப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அதனால் அவர் டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளார். அதே சமயம் சர்ப்ராஸ் கானுக்காக வருந்துகிறேன். அவரும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளாக அதிக ரன்கள் திரட்டியுள்ளார். அவர் இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதியானவர். இதே போல் அபிமன்யு ஈஸ்வரனும் 5-6 ஆண்டுகளாக ரன்வேட்டை நடத்தி வருகிறார். இருவரும் அணித்தேர்வில் கருத்தில் கொள்ளப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால் வருங்காலத்தில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

அதே சமயம் ஜெய்ஸ்வால் தேர்வு நல்ல முடிவு. சர்ப்ராஸ் கானின் பேட்டிங்கில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. அவர் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் பிரச்சினை இருந்தால், எப்படி இந்தியா முழுவதும் உள்ள மைதானங்களில் ரன் குவித்திருக்க முடியும். வேகப்பந்து வீச்சை சந்திப்பதில் அவருக்கு எந்த தடுமாற்றமும் இல்லை என்பதே எனது கருத்து.

தொடர்ந்து 2 மாதங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடியதால் பணிச்சுமை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியினரால் ஜொலிக்க முடியாமல் போனதாக எழும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமாட்டேன். ரஹானே ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் அசத்தினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கணிசமாக ரன்கள் சேர்த்தார். இதே போல் கேமரூன் கிரீன், டேவிட் வார்னர் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டிலும் நன்றாக ஆடினர்.

ஐ.பி.எல். முடிந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராவதற்கு போதுமான காலஅவகாசம் இருந்தது. அத்துடன் இங்கிலாந்து மண்ணில் நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம் நமது வீரர்களுக்கு உண்டு. அதனால் ஐ.பி.எல். போட்டியோடு முடிச்சு போடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடினாலும் கூட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப உங்களது தொழில்நுட்பத்தை மாற்றி செயல்பட்டு இருக்க வேண்டும்.

சமீபத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. அற்புதமான ஒரு போட்டி அட்டவணை. இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் சரியான ஆட்டங்களை, சரியான மைதானங்களுக்கு ஒதுக்கியுள்ளன. தங்கள் பணியை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள். நிச்சயம் இது பிரமாண்டமான ஒரு உலகக் கோப்பை போட்டியாக இருக்கப்போகிறது."

இவ்வாறு கங்குலி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்