உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம் - தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் பேட்டி

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அரங்கில் உலகக்கோப்பைக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2023-09-16 09:27 GMT

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக்கோப்பை பல்வேறு நாடுகளில் பயணித்து வருகிறது. இந்த உலகக்கோப்பை இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தது

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அரங்கில் உலகக்கோப்பைக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜூ, உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, உதவி தலைவர் ஆடம் சேட், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோப்பையை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதற்கான நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி கூறியதாவது,

சென்னை சேப்பாக்கம் மைதானம், உலகக்கோப்பை தொடருக்காக சிறப்பான முறையில் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. இங்குள்ள புதிய பெவிலியன் தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஐ.பி.எல். தொடரின் போதே, இந்த பெவிலியனை பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

மழை இல்லையெனில், சிறப்பான கிரிக்கெட்டை இந்த முறை ரசிக்க முடியும்." "சென்னை ரசிகர்கள் எப்போதும், நல்ல போட்டியை ரசித்துள்ளனர். சென்னையில் ஐந்து உலகக்கோப்பை ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆட்டம் நடைபெற இருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனைக்கு எப்போதும் போல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது." "பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு சென்னையில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சேப்பாக்கம் மைதானம் ஆட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் இல்லாதது வருத்தமாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்