10 வருடங்கள் ஆகிவிட்டது.. கண்டிப்பாக இம்முறை அதை செய்வோம் - ஸ்டீவ் சுமித் உறுதி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதை சுமித் நினைவு கூர்ந்துள்ளார்.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது.
அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்தியாவுக்கு எதிராக பார்டர் - கவாஸ்கர் கோப்பையை 2014/15-ம் ஆண்டு வென்றது. அதன் பின் 10 வருடமாகியும் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது.
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆரம்பத்திலேயே பேட்டிங்கில் தடுமாறினால் பின்னர் கம்பேக் கொடுப்பது கடினம் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார். அத்துடன் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். எனவே அதை மனதில் வைத்துக் கொண்டு இம்முறை இந்தியாவை தோற்கடித்து 10 வருடங்கள் கழித்து பார்டர் - காவாஸ்கர் கோப்பை ஆஸ்திரேலியா வெல்லும் என்று சுமித் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "2 போட்டிகள் கொண்ட தொடரில் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உங்களால் ஒளிய முடியாது. எனவே இது அற்புதமான தொடராக இருக்கப் போகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா தற்சமயத்தில் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த 2 அணிகளாக திகழ்கின்றன. கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நாங்கள் இந்தியாவை தோற்கடித்தோம். அதே போல எங்களுடைய ஊரில் அவர்கள் கடந்த சில வருடங்களாக மிகச்சிறப்பாக விளையாடினர். பார்டர் - கவாஸ்கர் கோப்பையை நாங்கள் வென்று 10 வருடங்களாகி விட்டது. எனவே இந்த வருடம் நாங்கள் அதை வென்றாக வேண்டும்" என்று கூறினார்.